இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ‘800’ திரைப்படத்தில் அரசியல் கிடையாது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி நடிப்பதால் கடும் சர்ச்சையும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையிலேயே படத்தை தயாரிக்கும் தர்மோசன் பிக்சர்ஸ் இதனை தெரிவித்துள்ளது.
“முத்தையா முரளிதனின் வாழ்க்கை வரலாறில் விஜய் சேதுபதி நடிப்பது பல்வேறு வகையில் அரசியலாக்கப்பட்டு வருவதை அறிகிறோம். இது ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது” என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையிலான காட்சியமைப்புகள் அதில் இருக்காது எனவும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து சாதிக்க முடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக அது இருக்கும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் மோசன் போஸ்டர் வெளியான நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், எதிர்ப்பு வலுப்பதை அடுத்து, தனக்கு வேண்டியவர்களுடனும் சில இயக்குனர்களுடனும் நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தப் படத்துக்காக, அவர் வாங்கிய தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு, படத்தில் இருந்து அவர் விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.