கொரோனா தொற்றை எதிர்த்து இந்தியா வலிமையுடன் போராடி வருவதாகவும் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பெருந்தொற்றாக கொரோனா உள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (30) மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும் போதே பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா பல இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு சமாளித்து வந்துள்ளது. அம்பான் புயல், நிசார்க் புயல், நிலநடுக்கம் , பல மாநிலங்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் என பலவற்றை எதிர்கொண்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது நினைவுபடுத்தினார்.
அதேநேரம், பெருந்தொற்று காலத்திலும் இயற்கை பேரிடரை மிக வெற்றிகரமாக இந்தியா சமாளித்துள்ளதாகவும் இந்த காலத்தில் மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் தன்னலம் பாராமல் உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்த கொரோனா இரண்டாவது அலையின் போது இன்னும் சிலர் முன்கள பணியாளர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இரண்டாவது அலை இந்தியாவை தாக்கிய போது, ஒக்ஸிஜன் தேவை அதிகளவு அதிகரித்து பெரிய சவாலாக மாறியது.
தற்போது நாள் ஒன்றுக்கு 9,500 மெட்ரிக் டன் ஒக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.