வங்கக் கடலின் கிழக்கு பகுதியில் உருவான ‘யாஸ்’ புயல் நேற்று பிற்பகல் இந்தியாவின் வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடற்கரை இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே பாலசோர் பகுதியில் கரையை கடந்தது.
புயல் கரையைக் கடக்கும் போது சுமார் 130 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிய நிலையில், அதனால் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று ஒடிசாவின் பாலசோர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கிழக்கு மித்னாபூரின் திகா என்ற கடற்கரை நகரம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது புயல் மழையில் சிக்கி ஒடிசாவில் 3 பேரும், மேற்கு வங்கத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே யாஸ் புயலின் கோர தாண்டவத்தில் மேற்கு வங்கத்தில் மட்டும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், ஒரு கோடி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.