October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை வீழ்த்துவதற்கு ஒன்றிணையுமாறு பிரதமர் மோடி அழைப்பு

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை வீழ்த்துவதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வெசாக் சர்வதேச கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டார்.

இந்த காணொலி நிகழ்வில் இலங்கை, நேபாளம், உள்ளிட்ட பல நாடுகளின் பிரதமர்கள், மகா சபை என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காணொலி நிகழ்வில் பேசிய பிரதமர், பகவான் புத்தரின் வாழ்க்கையை நினைவுபடுத்தும் நாளாகவும், அவரது உயரிய கொள்கைகள் மற்றும் தியாகங்களை பிரதிபலிக்கும் தினமாகவும் புத்த பூர்ணிமா அனுசரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், தற்போதைய தலைமுறையினரின் பொறுப்பற்ற வாழ்க்கைமுறை,எதிர்கால சந்ததியினரை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார் .

ஒரு வருடம் கடந்த நிலையிலும் இந்த பெருந்தொற்று நம்மை விட்டு செல்லாமல், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இரண்டாவது அலைக்கு முகம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

இந்த பெருந்தொற்று காரணமாக ஏராளமான மக்கள் இன்னல்களை எதிர்நோக்கியதாகவும், பல நாடுகள் பல்வேறு தாக்கங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.

பெருந்தொற்றினால் மிகப்பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

கொவிட்- 19 தொற்றுக்கு பிறகு பூமி எப்போதும் போல் இருக்காது என்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது .

தொடர்ந்து பேசிய பிரதமர் புத்த தர்மம்,புத்தரின் முக்கிய நான்கு போதனைகள் என பல்வேறு வகையில் அவரின் வாழ்க்கை தத்துவத்தை எடுத்துக்காட்டி புகழாரம் சூட்டினார்.

தற்போதைய தலைமுறையினரின் பொறுப்பற்ற வாழ்க்கைமுறை, எதிர்கால சந்ததியினரை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது என பிரதமர் விமர்சித்திருக்கிறார்.

இந்நாளில் புத்தர் வலியுறுத்திய இயற்கை அன்னைக்கு முன்னுரிமையும் ,மரியாதையும் வழங்கும் வகையிலான வாழ்வை வாழ்ந்து, நமது பூமியை பாதிப்பில் இருந்து மீட்க உறுதி பூணுவோம் என பிரதமர் வலியுறுத்தி இருக்கிறார்.

இன்றைய காலத்தில் வன்மம், தீவிரவாதம்,வன்முறையை பரப்பும் சில சக்திகள் இன்றும் இயங்குவதாக சாடியுள்ளார்.

இவ்வாறான பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை வீழ்த்துவதற்கு மனித நேயத்தில் நம்பிக்கை உள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த பெருந் தொற்று போராட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் தங்களது அன்பிற்குரியவர்களை இழைத்தவர்களுக்கு நிகழ்வில் இரங்கல் தெரிவித்தார்.