அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது அவருக்கு செலுத்தப்பட்ட ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை தற்போது இந்தியா வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆன்டிபாடி காக்டெயில் மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘இம்டெவிமாப், கேஸிர்விர்மாப், என்ற இரு பெயர்களில் இந்த மருந்தை ரோச் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்த மருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த மருந்தின் மூலம் குழந்தைகள், முதியோரை பெரும் இடரிலிருந்து மீட்க முடியும் எனவும் உயிரிழப்பை 70 சதவீதம் தடுக்க முடியும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் சிப்லா மருந்து நிறுவனம் விற்பனை செய்யும் இந்த இம்டெவிமாப், கேஸிர்விர்மாப் ஆகிய இரு மருந்துகளும் ஒரு டோஸ் விலை இந்திய ரூபாயில் 59,750 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சந்தையில் இந்த மருந்துகளின் அதிகபட்ச விலையாக ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபா நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் இருக்கும் ஒரு பக்கெட் மருந்தின் மூலம் 2 நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மருந்தும் 600 மில்லி கிராம் எடை கொண்டது என மருந்து நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு இந்த மருந்துக்கு அனுமதியளித்துள்ளது.