July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் சமூக வலைத்தளங்களின் புதிய விதிகளுக்கான காலக்கெடு நிறைவடைந்தது

Social Media / Facebook Instagram Twitter Common Image

இந்தியாவில் டுவிட்டர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவடைந்தது.

கடந்தாண்டு ஃபேஸ்புக், வட்ஸ் அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பெப்ரவரி மாதம் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.

விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் (25) நிறைவடைந்தது.

ஆனால் விதிகளை அமுல்படுத்த ஃபேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் அவகாசம் கேட்டிருந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள தலைமை நிறுவனங்களிடம் இருந்து இன்னும் எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

அதேநேரம் இந்திய நிறுவனமான ‘கூ ஆப்’ (koo app) மற்றும் புதிய சமூக ஊடகங்கள் வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதாக தெரிவித்துள்ளது.

இதனால் புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமன்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய விதிகளுக்கு டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்கள் செவி சாய்க்கத் தவறினால், அவை தடை செய்யப்படும் சூழல் உருவாகலாம்.

இதனால், நாளை (26) டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் செயல்படுமா என்ற அச்சமும், ஐயமும் இணையவாசிகள் இடையே எழுந்துள்ளது.