அமெரிக்காவின் ஃபைஸர், மாடர்னா மருந்து நிறுவனங்கள் டெல்லி அரசுக்கு தடுப்பூசிகளை வழங்க மறுப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ் சாட்டி இருக்கிறார் .
18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கொள்முதல் செய்யலாம் என்று அண்மையில் மத்திய அரசு தெரிவித்தது .
இதையடுத்து, பல மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் ஃபைஸர் மற்றும் மாடர்னா மருந்து நிறுவனங்களுடன் பேசி தடுப்பூசியை விற்பனை செய்யுமாறு தாம் கேட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அந்த நிறுவனங்களோ மத்திய அரசு கேட்டால் மட்டுமே நேரடியாகப் தடுப்பூசி விற்போம் எனவும் மாநில அரசுகளுக்கு விற்க முடியாது என தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார்.
அதனால் மத்திய அரசு அந்த நிறுவனங்களிடம் பேசி தடுப்பூசி இறக்குமதி செய்ய உதவ வேண்டும் என இருகரம் கூப்பி கேட்கிறேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல் போர்க் கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு பைஸர், மாடர்னா நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய மத்திய அரசு உதவ வேண்டும் என துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா தெரிவித்திருக்கிறார்.