கிழக்கு – மத்திய வங்கக் கடலில் இரு தினங்களுக்கு முன்பாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ‘யாஸ்’ புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது எனவும், இதனால் மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
புயல் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புயல், மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் 26 ஆம் திகதி கரையை கடக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை, உதகை மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
இதையடுத்து, தாழ்வான பகுதிகளிலும் வசிப்பவர்களை வெளியேற்றும் பணிகளை மேற்கு வங்க அரசு மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை புயல் தொடர்பாக ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திராவின் முதலமைச்சர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.