முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளுக்கு தனிச்சலுகை வழங்குவதை ஏற்க முடியாது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்;
சட்ட ரீதியாக ஆயுள் தண்டனை குற்றவாளிகள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை சிறையில் இருந்தால் விடுவிக்கலாம்.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை சட்ட ரீதியாக விடுவிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
சட்டரீதியாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை ஹீரோவாக்காதீர்கள்.குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி மட்டும் இறந்து போகவில்லை.அவரோடு 16-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். அவர்களைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது.
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு மட்டும் சலுகை வழங்குவதை ஏற்க முடியாது.தமிழக சிறைச்சாலைகளில் 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை அனுபவித்த அனைவரையும் விடுதலை செய்யலாம் என்ற கொள்கை முடிவின் அடிப்படையில், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தால் தடுக்கவோ, மறுக்கவோ மாட்டோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.