November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யுங்கள்”: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள எழு பேரின் விடுதலை குறித்து பரிசீலிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவரை கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல்வர் எழுதியுள்ள குறித்தக் கடிதம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலுவினால் குடியரசு தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் 2018 செப்டம்பர் 9 ஆம் திகதி தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

அப்போது அந்தத் தீர்மானத்தின்படி முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உள்ளது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 பேரையும் தற்போதைய கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு, 2018 ஆம் ஆண்டில் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு விடுதலை செய்ய குடியரசுத் தலைவர் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.