October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் “கருப்பு பூஞ்சை நோய்” தொற்று நோயாக அறிவிப்பு!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் கருப்பு பூஞ்சை பாதிப்பையும் தொற்றுநோய் என பட்டியலிடவேண்டும் என மாநில  அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அறிவிப்பை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கருப்பு பூஞ்சை நோயானது முழுமையாக குணப்படுத்தக்கூடியதுதான்.

இதனால் தேவையற்ற பயமோ, பதற்றமோ வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால், உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின்  பல்வேறு பகுதிகளில் கருப்பு பூஞ்சை பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு வருவதுடன் உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன.

கொரோனா தொற்றுக்குள்ளான நீரிழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகள் அதிக அளவில் எடுப்பவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில்  அதிக நாட்கள் சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால்  கருப்பு பூஞ்சை  அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்துள்ளன.