தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘டவ் தே’ புயல் வரும் 18 ஆம் திகதி இந்தியாவின் குஜராத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதற்குமுன்னர் அந்த புயால் 5 மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடுமென்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
‘டவ்-தே’ புயல் அதி தீவிர புயலாக நகர்ந்து கிழக்கு மத்திய அரபிக் கடலின் தென்மேற்கு திசையில் 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகரும் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து குஜராத் கடற்கரையை அண்மிக்கும் என்பதுடன், செவ்வாய்க்கிழமை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பெருமளவான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதனால் குஜராத்,கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அனர்த்த மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.