இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையின் பாதிப்புகள் மிகவும் கவலையளிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் பேசிய அவர்,
இந்தியாவில் மருத்துவமனைகள் நிரம்பி, உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. அவசரநிலை போன்ற ஒரு சூழல் ஏற்பட்டும் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராதது கவலையளிப்பதாகவும் டெட்ரோஸ் அதானோம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல மாநிலங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகின்ற ஒரு சூழ்நிலை உள்ளதாகவும் இந்தியாவில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து காணப்படுவதாகவும் டெட்ரோஸ் அதானோம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு இந்தியாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உதவி வருகின்றது. அதற்கமைய நடமாடும் மருத்துவமனை கூடாரங்கள், ஆயிரக்கணக்கான ஒக்ஸிஜன் செறிவூட்டிகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட ஏராளமான மருத்துவப் பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை, நேபாளம், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், தடுப்பூசி வழங்குதல், பொது சுகாதார நடவடிக்கைகள் மூலம் தான் தொற்று நோயிலிருந்து வெளியேற முடியும் எனவும் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.