கொரோனா போன்ற நெருக்கடியான காலங்களில் நம்பிக்கையை இழக்கும் நாடல்ல இந்தியா என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
நூற்றாண்டுக்கு ஒரு முறை பரவும் இந்தப் பெருந்தொற்று உலகத்துக்கே சவால் விடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக போராடுவதில் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறோம்.
இது வரை நாடு முழுவதும் சுமார் 18 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது எனவும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக முக்கிய பாதுகாப்பை வழங்குகிறது. தீவிர நோய் பாதிப்பு அபாயத்தை இது குறைக்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வேதனையைக் குறைப்பதில், அரசின் ஒவ்வொரு துறையும் இரவு பகலாக பாடுபட்டு வருகிறது.மத்திய , மாநில அரசுகள் இணைந்து அதிக அளவில் நாட்டு மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்வதில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியா நெருக்கடியான காலங்களில் நம்பிக்கை இழக்கும் நாடு அல்ல.இந்தச் சவாலை ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் சமாளிக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார்.
பிஎம்-கிசான் திட்டத்தில் 8 ஆவது தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
8-வது தவணை திட்டத்தில் 9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி நேரடியாக வங்கிக் கணக்கு மூலம் வழங்கினார்.
பெருந்தொற்று காலத்திலும், உணவு ,தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை படைத்துள்ளதாக இதன்போது பிரதமர் பாராட்டியுள்ளார்.
ஒவ்வொருவரும் தடுப்பூசிக்காக பதிவு செய்து, தங்களது முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.இந்த நெருக்கடி காலத்தில், ஒக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்வதில் ஆயுதப் படையினர் முழு ஆற்றலுடன் பணியாற்றி வருகின்றனர்.
நாட்டின் மருந்து துறை அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது.மருந்துகளை பதுக்கி வைக்கும் கள்ளச் சந்தைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.