November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘கருப்பு பூஞ்சை’ நோயால் 52 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மியூகோர்மைகோசிஸ் என்ற ‘கருப்பு பூஞ்சை’ தொற்றுக்கு இலக்காகி இதுவரை 52 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கும் மியூகோர்மைகோசிஸ் என்ற பூஞ்சை நோய் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கும், குணமடைந்து வருவோருக்கும் இந்த கருப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 1500 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருந்த நிலையில், இராண்டாவது அலையில் அது வேகமாக பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

இந்நோயின் அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, நாசியில் பிரச்சனை உள்ளிட்டவை காணப்படுகின்றன.

மேலும், மூக்கு, கண்கள் வழியாக பரவும் இந்த தொற்று நோய் நேரடியாக மூளையை பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பூஞ்சை நோய்க்கு வேறு வகையிலான சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாகவும் இது அரசுக்கு கூடுதல் சுமையாக இருப்பதாகவும் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதேவேளை இந்த நோய் தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்ததும் இதற்கான மருந்து தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.