February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய சந்தோஷ் பாபு, பத்மபிரியா

கமல்ஹாஸனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும் பத்மபிரியா ஆகியோர் விலகியுள்ளனர்.

அதேநேரம், கட்சியின் பொது செயலாளர், அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாகவும் கமல்ஹாசனுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியையும்  அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல , சந்தோஷ் பாபுவை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த பத்ம பிரியாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில், “சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன்.

அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கிறேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்” என தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில், சென்னை வேளச்சேரி தொகுதியில் சந்தோஷ்பாபு போட்டியிட்டிருந்ததுடன், மதுரவாயல் தொகுதியில் பத்மபிரியாவும் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

இதேவேளை கடந்த வாரம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில், அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.