November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் கொரோனா நோயாளர்களை தாக்கும் “கருப்பு பூஞ்சை” தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒட்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அன்றாடம் 3000 க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.

இதனிடையே “மியூகோர்மைகோசிஸ்” எனப்படும் அரிய “கருப்பு பூஞ்சை” தொற்று கொரோனா தொற்றாளா்களில் நீண்டகாலம் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களையும் கொரோனா தொற்றுக்குள்ளான நீரிழிவு போன்ற தொற்றா நோயினால் தீவிரமாக  பாதிக்கப்பட்டவர்களையும் அதிகமாக பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

“கருப்பு பூஞ்சை’ எனப்படும் இந்த தொற்று கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வரும் சில நோயாளிகளின் மூக்கு, கண் மற்றும் சில நேரங்களில்  மூளை மற்றும் நுரையீரலை பாதிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்தியாவில் மேலும் நெருக்கடியான நிலையை சுகாதாரப் பிரிவு எதிர்கொண்டுள்ளது.

“கருப்பு பூஞ்சை” தொற்று என்றால் என்ன?

“கருப்பு பூஞ்சை” தொற்று என்பது ஒரு அரிதான ஆனால் ஆபத்தான பூஞ்சை தொற்று ஆகும்.இது இயற்கையில் உள்ள மியூகோர்மைசீட்ஸ் எனப்படும் பூஞ்சைக் குழுவால் ஏற்படுகிறது.

தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாக இது காணப்படும்.  மண்ணிலும் காற்றிலும் மற்றும் ஆரோக்கியமான மனிதர்களின் மூக்கு மற்றும் சளியிலும்  கூட “கருப்பு பூஞ்சை”  காணப்படும்.

ஒரு நோயாளிக்கு நீண்ட கால சுகாதார பிரச்சினையை எதிர்கொள்ளும் போது அல்லது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வகையிலான மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போதும் மட்டுமே இதன் தாக்கம் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் அல்லது புற்று நோயாளிகள் அல்லது எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் போன்ற கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களிடையே இது உயிர் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

பூஞ்சை வித்திகள் பொதுவாக சுவாவ வாயில் வழியாக நுழைந்து நாசிப்பகுதி அல்லது நுரையீரலை பாதிக்கின்றன. அத்தோடு இவை திறந்த வெட்டு காயம் வழியாகவும் உடலினுள் நுழைந்து பாதிக்கலாம்.

கொரோனா நோயாளர்களை ஏன் தாக்குகின்றது?

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மிக மோசமான கட்டத்தை அடையும் நோயாளர்களுக்கு வைத்தியர்கள் சிகிச்சைக்காக அதிகளவில் “ஸ்டீராய்டு” (இவ்வகை மருந்துகள் நோயைக் குணமாக்காது ஆனால் நோயை மறைக்கும் அல்லது தற்காலிக நிவாரணத்தை தரும்) மருந்துகளை பரிந்துரைக்கின்றார்கள்.

இதன் காரணமாக உடலின் சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன் நோயாளியின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைகின்றது. இதனால் நோயாளிக்கு “மியூகோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தீவிரம் அடைவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

நோய் அறிகுறிகள்

கண்கள் மற்றும் மூக்கை சுற்றி வலி மற்றும் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், இரத்தக்களரி, வாந்தி மற்றும் மனநிலை மாற்றம் ஆகியவை எச்சரிக்கை மிக்க அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறையும் வகையான மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகும் போது அவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுமாயின் அவர்கள் மிகவும் அவதானமான நிலைக்கு செல்லலாம்.

இப்படியானவர்களுக்கு நாசி அடைப்பு, ஒரு பக்க முக வலி அல்லது உணர்வின்மை, மூக்கு அல்லது அண்ணத்தின் மீது கறுப்பு நிறமாற்றம், பல் வலியுடன் மங்கலான அல்லது இரட்டை பார்வை, தோல் புண், நரம்புகளில் இரத்த உறைவு, மார்பு வலி மற்றும் மோசமான சுவாச அறிகுறிகள் போன்றன அறிகுறியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

“கருப்பு பூஞ்சை’ தொற்றுக்கான சிகிச்சை

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளை நிறுத்துவதன் மூலமும், ஸ்டீராய்டு எனப்படும் தற்காலிக சிகிச்சை மருந்துகளை எடுத்துக்கொள்வதை குறைத்தல் மற்றும் அறுவை சிகிச்சை மூலமும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

இந்தியாவில் அம்ஃபோடெரிசின் மருந்துக்கு கேள்வி?

இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்குள்ளாகும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க “அம்ஃபோடெரிசின் பி” என்ற மருந்தினை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.

இதனால் அம்ஃபோடெரிசின் பி மருந்துக்கான தேவை இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக இந்தியாவின் இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த அம்ஃபோடெரிசின் பி மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.