May 14, 2025 18:48:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் மோசமடையும் கொரோனா நிலைமை!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் ஒக்ஸிஜன் உதவியுடன் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தில் மே 10 ஆம் திகதி நிலவரப்படி ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் உள்ள ஏராளமான மருத்துவமனைகளில் ஒக்ஸிஜனுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழக அரசின் தகவலின்படி சுமார் 40 ஆயிரம் பேர் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகின்றது.

சென்னையை பொறுத்தவரை இதுவரை மொத்தம் 35 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் மற்றும் கிங் என எந்த அரசு மருத்துவமனைகளிலும் ஒக்ஸிஜனுடன் கூடிய படுக்கைகள் காலியாக இல்லை என அரசு கொடுத்துள்ள தரவுகளில் தெரியவந்திருக்கிறது.

அதேபோல், தனியார் மருத்துவமனையிலும் ஒக்ஸிஜனுடனான படுக்கைகள் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது

கோவை, மதுரை ,அரியலூர் , செங்கல்பட்டு தூத்துக்குடி என பல மாவட்டங்களில் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆங்காங்கே சில மருத்துவமனைகளின் முன்னால் ஆம்புலன்சுகளில் நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்க கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 4 நோயாளிகள் இன்று மாலை உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில் படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால், சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.