கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு நேர பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 10 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களும் முடங்கியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடை பிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
இதன்படி இன்று முதல் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை வாகனங்கள் தவிர்ந்த வேறு வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு துறைகளில் மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் தவிர அனைத்து அலுவலகங்களும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள், மதுபானக் கடைகள், அழகு நிலையங்கள், சலூன்கள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை பூங்காக்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இதேவேளை மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆகியவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் சட்டத்தை மீறி செயற்படுவோரை கண்டுபிடிக்க 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும், 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினரும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.