January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழகத்தில் இனி கொரோனாவால் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படக்கூடாது’: அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின்

கொரோனா தொற்றால் தமிழகத்தில் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம்  நடைபெற்றது.

இதன்போது, தமிழகத்தில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் ஒக்ஸிஜன் இருப்பை உறுதி செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களை கேட்டுக்கொண்டதுடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும் எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு தரமான உணவு கிடைத்திடவும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனே சிகிச்சை அளிப்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தமிழ்நாட்டில் தற்போது பல நெருக்கடிகளுக்கிடையே அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஒக்ஸிஜன் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திடவும், எந்தவிதமான சூழலிலும் ஒக்ஸிஜன் வீண் போகக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.