தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வரால் 59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்பு கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சராக பதவியேற்ற மு க ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, தமிழகத்திற்கான ஒக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலிலும் மு.க.ஸ்டாலின் இதனை வலியுறுத்தினார்.
இதனையடுத்து தமிழகத்திற்கான ஒக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அத்தோடு தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அதிகாரிகள், மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளின் செலவை அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.