
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ள திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியை கோரியுள்ளார்.
இன்று காலை 10.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்றிருந்தனர்.
அதன்போது சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க் களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார்.
இதன்படி ஆட்சி அமைப்பதற்கான அனுமதியையும் கோரினார்.
இந்த கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, ஆட்சியமைக்க அனுமதி வழங்கினார்.
இதையடுத்து மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர், ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறியுள்ளார்.
இதற்கமைய 7 ஆம் திகதி திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வை ஆளுநர் மாளிகையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமது அரசின் அமைச்சரவை பட்டியல் நாளைய தினத்தில் திமுக தலைவரினால் ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது.