இந்தியா முழுவதும் ஒரே நாளில் 3,69,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் கொரோனாவால் ஒரே நாளில் 3,455 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் இராணுவத்தின் உதவியை கோரியுள்ளனர்.
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை படுக்கைகள் நிரம்பியுள்ளன மற்றும் மருத்துவ ஒக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றது.
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 28 ஆயிரத்து 064 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 15 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. அதேபோல் கொரோனா உயிரிழப்பும் 15 நாட்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இதனிடையே சென்னையில் மட்டும் 6,150 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 18,016 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 1,23,258 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.