January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி: புதுச்சேரி முதல்வராகிறார் என்.ரங்கசாமி

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அதற்கமைய நாளைய தினம் முதலமைச்சராக என்.ரங்கசாமி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில், காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து அங்கு நாராயணசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது காங்கிரஸ்.

அப்போது அங்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயண சாமிக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.

யாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது என்ற மோதல் தொடர்ந்து ஏற்பட்ட நிலையில், புதுச்சேரியில் 5 ஆண்டுகளாக குழப்ப நிலையே நீடித்து இருந்தது.

ஐந்து வருட நிறைவில் புதுச்சேரியில் அமைச்சர்கள் 6 பேர் இராஜினாமா செய்ததால் ஆளும் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மத்தியில் ஆளும் பாஜக ,என்ஆர் காங்கிரஸ் உடன் கைகோர்த்து 2021 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக 9, அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டன.

அதேபோல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 14 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், விசிக ஒரு இடத்திலும் போட்டியிட்டன.

இதுதவிர மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. சுயேட்சைகளையும் சேர்த்து 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்

இந்நிலையில் தேர்தல் முடிவுகளின்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றதுடன் 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

மேலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆகவே புதுச்சேரியில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ,வெற்றி பெற்றுள்ள என்.ஆர் காங்கிரஸ், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.