கேரளாவில் சரித்திரத்தை மாற்றி எழுதியிருக்கிறார் பினராயி விஜயன்.ஐந்து வருட ஆட்சிக்கு பின்னர், அதே அரசியல் கட்சி மீண்டும் கேரளாவில் ஆட்சியில் அமரப் போகிறது.
கேரளாவில் எந்த முதல்வரும், எந்த மார்க்சிஸ்ட் முதல்வர்களும் செய்யாத சாதனையை பினராயி விஜயன் இந்தத் தேர்தலில் செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர் .
இந்தத் தேர்தலின் முடிவை பினராயி விஜயனின் வெற்றியாக மட்டுமே பார்க்க முடியும் எனவும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
கேரளாவின் மலபார் மாவட்டத்தில் உள்ள பினராயி என்ற ஊரில் 1945-ல் பிறந்தார் விஜயன்.
பெயருக்கு முன்போ அல்லது பின்போ தங்களின் பிறந்த ஊரைச் சேர்த்துக்கொள்வது கேரள மக்களின் வழக்கம் என கூறப்படுகிறது.
அவ்வாறு ஒட்டி வந்ததுதான் பினராயி என்ற அவரின் ஊர் பெயர்.மாணவர் பருவத்திலேயே அரசியலில் அதிகளவு தீவிரம் கொண்டவராக இருந்த பினராயி விஜயன்,தனது,கல்லூரிக் காலத்திலேயே துடிப்புமிகு இளைஞராக கையில் செங்கொடி ஏந்திய ஒரு அரசியல்வாதியாக அப்போதே மக்களால் கணிக்கப்பட்டவர்.
1967-71இல் மதக்கலவரம் ஒன்று ஏற்பட வேண்டிய சமயத்தில் அதனை தடுத்து நிறுத்திய பெருமை இவரை சாரும் என கூறப்படுகிறது.
தலசேரியில் சாமி ஊர்வலத்தில் முஸ்லிம்கள் செருப்பு எறிந்தார்கள் என்ற புரளி கிளம்பியதை அடுத்து முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது .
அப்போது இஸ்லாமிய மசூதிகளை சேதப்படுத்துவதை தடுக்க சி.பி.எம் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் வீதம் மசூதியில் காவல் இருந்துள்ளனர்.அப்போது மறைத்து வைத்த அரிவாளுடன் வந்த சிலர் அங்கு காவல் இருந்த இருவரையும் வெட்டி உள்ளனர்.
அந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மற்றையவர், வெட்டப்பட்ட நிலையில் உயிர் மட்டும் எஞ்சி இருந்ததாக கூறப்படுகிறது .
அன்று அரிவாள் வெட்டுக்கு இலக்காகி நூலிழையில் தப்பியவர் தான் இன்றைய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்.அந்த அளவுக்கு அரசியல் மீதும் மக்கள் நலன் மீதும் பினராயி விஜயன் அக்கறை கொண்டிருந்தார்.
பின்னர் படிப்படியாக கட்சியின் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்ட பினராய் விஜயன்,முதன் முதலில் 1970 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார்.
கேரளத்தின் புகழ்பெற்ற இடதுசாரித் தலைவரான ஈ.கே.நாயனார் தலைமையிலான அப்போதைய அரசில், மின்சாரம் மற்றும் கூட்டுறவுத் துறையின் அமைச்சராக இருந்துள்ளார் .
2002ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் என்ற உச்ச பதவியை அடைந்தார்.
தான் கொண்ட கொள்கையில் உறுதியான பினராய் விஜயன்,கேரளாவில் மற்ற முதல்வர்களை விட அதிக பிரச்சனைகளை சந்தித்தவர்.
எவ்வளவு இயற்கை துயர்கள், அரசியல் சர்ச்சைகள், சபரிமலை விவகாரம் பெருவெள்ளம், நிலச்சரிவுகள் ,தங்க கடத்தல் விவகாரம், போதை பொருள் கடத்தல் என முதல்வர் இருக்கையை அசைத்தாலும் ஆடாமல் நின்று முகம் கொடுத்தவர் பினராய் விஜயன்.
கேரளாவில் கடந்த வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கம்யூனிஸ்டும்,காங்கிரஸும் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருப்பது தான் வரலாறு.
இம்முறை அந்த வரலாற்றை மாற்றி மீண்டும் முதலமைச்சர் இருக்கையை கைப்பற்றியது சி.பி.எம் .