November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தால் 5 ஆண்டு சிறை; ஆஸி.அரசாங்கம் அறிவிப்பு

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியர்கள் நாட்டுக்கு திரும்பி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 66 ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் மே 3 ஆம் திகதி முதல் இந்த கட்டுப்பாடு அமுலுக்கு வருவதாக அவுஸ்திரேலியாவின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

குற்றத்துக்கு ஏற்ப சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரமடைந்துள்ள கொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் இந்தியாவுக்கான பயணத்தடையை விதித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா மே 15 ஆம் திகதி வரை இந்தியாவுடனான நேரடி விமான சேவையை நிறுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியர்கள் வேறு நாடுகள் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவுஸ்திரேலியா புதிய தண்டனை மற்றும் அபராதம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திங்கள்கிழமை முதல், 14 நாட்களுக்குள் இந்தியாவில் இருந்து எவரும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகின்றது. இந்த முடிவு மே 15 ஆம் திகதி மீள பரிசீலிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“எங்களது இதயங்கள், இந்திய மக்களிடம், நமது இந்திய – அவுஸ்திரேலிய சமூகத்திடமும் இருக்கிறது.”, “அரசாங்கம் இந்த முடிவுகளை இலகுவாக எடுக்கவில்லை” என்று சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்தியாவில் 9,000 அவுஸ்திரேலியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.அவர்களில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படடுள்ளது.

அவுஸ்திரேலியர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்புவதற்கு எதிராக தண்டனை வழங்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.