தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியைக் யார் கைப்பற்றுவார் என்பது குறித்த வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ரிபப்ளிக் சி.என்.எக்ஸ், இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் என பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
இதில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை பெறும் என அந்த கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பர் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில் தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரிய வந்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
ரிபப்ளிக் சி. என்.எக்ஸ் கருத்து கணிப்பின்படி:
அ.தி.மு.க. கூட்டணி 58 – 68 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 160- 170 இடங்களிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பி- மார்க் கருத்து கணிப்பின்படி:
அ.தி.மு.க.கூட்டணி 40-65 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி 165- 190 இடங்களிலும் அ.ம.மு.க 1-3 இடங்களிலும், ம.நீ.ம கூட்டணி 1-3 இடங்களிலும் மற்றவை 0-3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டுடேய்ஸ் சாணக்கியா கருத்து கணிப்பின்படி:
அ.தி.மு.க, கூட்டணி 46- 68 இடங்களிலும், தி.மு.க., கூட்டணி 164-186 இடங்களிலும் மற்றவை 0-8 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே கருத்து கணிப்பின்படி:
தி.மு.க. கூட்டணி 175-195 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 38- 54 இடங்களிலும், அமமுக. கூட்டணி 1-2 இடங்களிலும், ம.நீ.ம 0-2 இடங்களிலும், மற்றவை 0-3 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சி ஓட்டர்ஸ் கருத்து கணிப்பின்படி:
தி.மு.க, கூட்டணி 160 -172 தொகுதிகளிலும், அ.தி.மு.க, கூட்டணி 58 – 70 தொகுதிகளிலும், அமமுக 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.