தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ளது.
ஆளும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தொண்டர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்கப்படும் என்று அதிமுகவின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் துணை-முதலமைச்சர் பன்னீர் செல்வம் அணிக்கும் இடையில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் முறுகல் நிலை உருவாகியுள்ளது.
முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி (ஈபிஎஸ்) அணி விரும்புகிறது.
ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் அதை முடிவு செய்யலாம் என்று ஓபிஎஸ் அணி கூறுகின்றது.
தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை அடிப்படையாக வைத்தே தனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன, இனியும் அவ்வாறே இருக்கும் என்று பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கீதாசார வாசகம் தமிழக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை 7ஆம் திகதி இது குறித்த முடிவு அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் தனது ஆதரவாளர்களுடன் பன்னீர் செல்வம் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றார்.
முதல்வர் பழனிசாமியும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.