May 1, 2025 20:22:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மறைந்த நடிகர் விவேக்கிற்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

மறைந்த நடிகர் விவேக்கிற்கு திரைப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திடீர் மாரடைப்பால் நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது விவேக்கின் இல்லத்திற்கு சென்று திரைப் பிரபலங்களும் ,அரசியல் தலைவர்களும் ,ரசிகர்களும், அவரின் நண்பர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தனது ஈடு இணையற்ற கலை சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்துக்கு பெருமை சேர்ந்தவர், நடிகர் விவேக் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து வேதனையடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர். எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமன்றி சிந்திக்கவும் வைத்தது.

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு, திரைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பு. கலைச்சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு. நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் மகிழ்ச்சியில் திளைக்க செய்தவர் விவேக் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் விவேக் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.

பத்மஸ்ரீ விவேக்கின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர், கருணாநிதியிடம் தனி அன்பு கொண்டவர், நடிகர் விவேக் என திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விவேக்கின் ஆத்மா சாந்தியடையட்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சத்யராஜ்.

வெறும் வார்த்தைகளால் அவரது குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ, கலையுலகிற்கோ ஆறுதல் படுத்திவிட முடியாது. தம்பி உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதரர்களில், ரசிகர்களில் நானும் ஒருவன்” என்று அந்த வீடியோவில் உருக்கத்துடன் பேசியுள்ளார்.

 

நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் என கமல்ஹாசன்  கூறியுள்ளார்.

மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என அவர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் தனது இரங்கலை தெரிவித்து இருக்கிறார் .

Image

பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர், நடிகர் விவேக்.

நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர் என வைகோ  இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது v விசிக தலைவர் திருமாவளவன்

 

தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர்  என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர் எனவும் தெரிவித்திருக்கிறார்.

சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராக மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்தவர் நடிகர் விவேக் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.