மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ருந்த நடிகர் விவேக் இன்று காலமானார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் விவேக், 1986- 1992 ஆண்டுகளில் சென்னைத் தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றினார்.
அப்போது தான் Madras Humour club இல் அவர் செய்த காமெடி நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது.
அதன் வழியான தொடர்புகளே, பிற்காலத்தில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரால் விவேக் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட காரணமாக அமைந்தது.
1987 ஆம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் சிரிப்பும் சிந்தனையும் கலந்த நகைச்சுவையை பரப்பி, சின்னக் கலைவாணர் என கொண்டாடப்பட்டவர் நடிகர் விவேக். நகைச்சுவை மட்டுமின்றி சிந்தனையை தூண்டும் வகையிலும் நடித்து மக்களை கவந்தவர்.
ஒரு நடிகராக விவேக்கிற்கு தனி அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் ‘காதல் மன்னன்’. அதன்பிறகு, அவர் நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின.
2009 ஆம் ஆண்டு நடிகர் விவேக்கிற்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.
நடிகர் விவேக்கை தனி காமெடியனாக புகழ்பெறச் செய்த திரைப்படம் ‘காதல் மன்னன்’ ஆக இருந்தாலும் குஷி, தூள், ரன் என பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
சமூக சீர்திருத்த கருத்துகளை கூறி நடித்ததால், சின்னக் கலைவாணர் என்ற பட்டமும் அவருக்கு உண்டு.
நடிகர் விவேக் தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை 5 தடவைகள் பெற்றுள்ளார்.
ரன், சாமி, பேரழகன் படங்களுக்கு பிலிம்பேர் விருதும் பெற்றுள்ளார்.
2000 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் மட்டும் 50 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விவேக்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர். எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமன்றி சிந்திக்கவும் வைத்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக் கன்றுகளை நட்டு, சமூகப் பணியாற்றி வந்தார்.
தற்போது நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கம் இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
நடிகர் விவேக் உடலுக்கு திரை உலகத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு திரைப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.