மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் விவேக் விரைவில் குணம்பெற்று கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் சின்னக் கலைவாணர், நடிகர் விவேக் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன் என ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.
வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது விவேக் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது .
உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நடிகர் விவேக்கின் உடல்நலக்குறைவுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து இதயக் குழாய் அடைப்பு நீக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
எக்மோ உதவியுடன் உள்ள விவேக்கின் உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டியுள்ளது என மருத்துவமனை வட்டாரம் கூறியுள்ளது.
சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' @Actor_Vivek அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன்.
அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) April 16, 2021