January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நடிகர் விவேக் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்”: மருத்துவமனை அறிக்கை

நடிகர் விவேக்கிற்கு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ‘எஸ்ஐஎம்எஸ்’ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நடிகர் விவேக்குக்கு இன்று காலை நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல்  ஏற்பட்ட நிலையில் அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விவேக்கின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனைதான் உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விவேக் நேற்று போட்டுக்கொண்ட கொரோனா தடுப்பூசியால் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.