தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலை கட்டுப்பாட்டை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அரியர் வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதியினால், அங்கு ஆஜராகிய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞரிடம், ‘இரண்டாவது அலை தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், ‘தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாட்டை மீறியுள்ளதாகவும், இரண்டாவது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அறுதியிட்டு கணிக்க முடியவில்லை. என்றும் தற்போது தடுப்பூசிகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாகவும்’ அவர் விளக்கமளித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அரச சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளிப்பார் எனவும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள் இன்றே சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.