இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எதிர்வரும் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்றை தடுக்க மக்களிடம் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்றை தடுக்க வேண்டுமென மக்களிடம் வலியுறுத்தியுள்ளதுடன் தடுப்பூசி கிடைப்பதற்கான வசதிகள் இல்லாதவர்களுக்கு மருந்துகள் கிடைக்க உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மேலும் தடுப்பூசி குறித்த புரிதலை ஏற்படுத்தி, வயதானவர்களுக்கும் மருந்து எடுத்துக் கொள்வதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்தல் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முகக்கவசம் அணிய வேண்டும், பிறரையும் முகக்கவசம் அணிய ஊக்குவிக்க வேண்டும் என மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழாவையொட்டி நாள்தோறும் 2 இலட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கு சுகாதாரத்துறை நிர்ணயித்துள்ளது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இரண்டாவது கொரோனா அலை பரவத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.
இதனையடுத்து கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பிரதமர், முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அதன் அடிப்படையிலேயே நான்கு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் இதுவரையில் 37,32,000 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி திருவிழா காலத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்களில் தடுப்பூசி போடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.