photo :twitter/@MihirkJha
மேற்கு வங்கத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பின் போது ஒரு சில வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கூச் பெஹார் வாக்குச் சாவடியில் மத்திய படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது கூச் பெஹார் மாவட்டம், மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மக்களில் ஒரு தரப்பினர் மத்திய படையினர் வைத்திருந்த துப்பாக்கிகளை பிடுங்கி அவர்களைத் தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
இதனால், வேறு வழியின்றி தற்காப்புக்காக மத்திய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதேவேளை, மேற்கு வங்கத்தின் வடபகுதியில் உள்ள சிலிகுரியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், மத்திய பாதுகாப்பு படைக்கு எதிராக மம்தா பானர்ஜி மக்களை தூண்டி விடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 4-வது கட்ட தேர்தலில் 80.9% வாக்குகள் பதிவாகின. அங்கு அதுவரை 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது