New update:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை, வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவான முதல் 5 தொகுதிகளும் சென்னை மாவட்டத்தில்தான் உள்ளன.
வில்லிவாக்கம் – 55.52%
தி.நகர் – 55.92%
வேளச்சேரி – 55.95%
மயிலாப்பூர் – 56.59%
அண்ணாநகர்- 57.02%
ஆகிய தொகுதிகளில் குறைந்த அளவில்தான் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, தமிழகத்தை பொறுத்தவரை நேற்று காலை முதல் சீரான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகி உள்ளன.
தோராயமாக, 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று கூறுயிருந்த நிலையில், இன்று அதிகாரபூர்வமாக தொகுதிகளின் வாக்கு சதவீத விவரங்களை வெளியிட்டுள்ளார்.
Update- 06.04.2021/இந்திய நேரம் 7.48pm
இந்தியாவின் தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தலின் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.
தமிழகத்தின் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
தேர்தல் ஆணையகத்தின் மாலை 7 மணி வரையான கணக்குகளின்படி, தமிழகத்தில் 72 வீதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அனுப்பும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
தேர்தல் வாக்குப் பதிவுகள் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்ததாக இந்திய தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்றுப் பரவல் அபாயத்துடன் நடைபெற்ற தேர்தலில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தனியாக வாக்களிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்திய சட்டசபைகளுக்கான தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸாம் ஆகிய மாநிலங்களுக்கான வாக்குப்பதிவுகள் இன்று நிறைவடைந்தன.
இதில் மேற்கு வங்கத்தில் சில வன்முறைகளுக்கு இடையே 77.68% வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரளாவில் 74.02% வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன .
ஏனைய மாநிலங்களுக்கான தேர்தல்களும் கட்டம் கட்டமாக நடந்து வருகின்றன.
அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்ததும், மே மாதம் 2 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.