November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல்: 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்துமாறு அ.தி.மு.க வலியுறுத்தல்

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட 5 தொகுதிகளில் தி.மு.க.வினர் பணம் விநியோகித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் எனக் கோரி அ.தி.மு.க சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து அ.தி.மு.க.வினர் அந்த தொகுதிகளில் தேர்தலை நிறுத்த கோரிய மனுவை அளித்துள்ளனர்.

கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளிலும் தி.மு.க பணம் விநியோகித்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தி.மு.க.வினர் நவீன முறையில் ஊழல் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் எனவும் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் மிக மிக கைதேர்ந்தவர்கள் என்பது சர்க்காரியா கமிஷன் மூலம் நமக்கு தெரியும் என ஜெயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வாக்காளர்களின் கையடக்கத்தொலைபேசி எண்களை பெற்றுக்கொண்டு கூகுள் பே மூலமாக, அவர்களின் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, ‘கொளத்தூர் தொகுதியில் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுக்களையும் அழைத்து ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் பணம் விநியோகித்துள்ளார்.

இந்த 5 தொகுதிகளில் பணத்தை வாரி வாரி இறைத்துள்ளதாகவும், 2 ஜி ஊழலில் வந்த பணம் 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களிடம் உள்ளது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அந்த பணத்தை வைத்து, செயற்கையான வெற்றியை பெற நினைப்பதாகவும் இந்த 5 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.