(Photo:Election Commission of India/Twitter)
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் தமிழகமெங்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை நடக்கவுள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிப்பு இயந்திரங்களை அனுப்பும் பணி பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கெமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுவது கண்காணிக்கப்படவுள்ளது.
மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,20,807 விவிபாட் இயந்திரங்கள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம்) ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தமுறை தேர்தல் பணியில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளதாகவும் பாதுகாப்பு பணிக்கு 300 துணை இராணுவப்படையினரும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக தேர்தல் களத்தில் அதிமுக, திமுக, மநீம, அமமுக தலைமையில் நான்கு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன.
இது தவிர சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.
இந்தத் தேர்தலில் 3,18, 28,727 பெண் வாக்காளர்களும், 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.