July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டுவர வேண்டும்’; அமித் ஷா

தமிழக சட்டமன்றத் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி, மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டு வர வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு, டீ விற்றவர் மோடி எனவும் விவசாயி மகனாக பிறந்தவர் பழனிசாமி எனவும் தெரிவித்துள்ள அமித் ஷா,
கோயில் நகரமான திருநெல்வேலிக்கு வந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

திருநெல்வேலி தர்ம பூமி ,மோட்ச பூமி.இந்த மண் பாரதியார், வா உ சி,புலித்தேவன் சுந்தரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த மண்.

உதயநிதியை முதல்வராக்க முயற்சி செய்யும் கட்சி தி.மு.க. அது குடும்பக் கட்சி, பணக்காரக் கட்சி.ஆனால் பா.ஜ.க ஏழைகளை மையமாக வைத்து வளர்ந்துள்ளது.

பிரதமர் மோடி சாதாரண ஒரு மனிதராக டீ விற்று உலகமே பாராட்டும் அளவிற்கு பிரதமராக உயர்ந்துள்ளார்.

அதேபோல் சாதாரண ஏழை விவசாயியின் மகனாக பிறந்து தனது உழைப்பால் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி.

மக்களாட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல்.காங்கிரஸ் 4ஜி போன்று நான்கு தலைமுறைகளாக இந்த தேசத்தில் ஆட்சி செய்து வருகிறது.

பிரதமருக்கு மீனவர்கள், விவசாயிகள், ஏழைகள் பற்றிய கவலை. ஆனால் ஸ்டாலினுக்கு தனது மகனை பற்றி மட்டும்தான் கவலை.

ஸ்டாலினிடம் கோபமும் ஊழலும் வளர்ந்து வருகிறது. முதல்வரின் தாயாரைக் கேவலமாக பேசும் அளவுக்கு அந்தக் கட்சி உள்ளது.

தி.மு.க.வில் உள்ள முக்கிய நபர்கள் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து, பெண்களை கேவலமாக பேசி வருவதால், வரும் தேர்தலில் பெண்கள் ஒரு வாக்கு கூட தி.மு.க.வுக்கு போடாமல் தாமரையை வெற்றி பெற செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழகத்தின் முழு வளர்ச்சிக்கும் அ.தி.மு.க வும் பா.ஜ.க.வும் பாடுபடுகிறது, நாட்டுக்காக பாடுபடும் கட்சியா அல்லது குடும்பத்திற்காக பாடுபடும் கட்சியா? என உணர்ந்து அ.தி.மு.க, பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்து எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் பிரதமரும் தமிழக முதல்வரும் சாதாரண மக்களை பற்றி கவலைப்படக் கூடியவர்கள்.விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் ஆட்சி பாரதிய ஜனதா ஆட்சி.

பிரதமர் மோடி தமிழ் மொழி மீது ஈடுபாடு கொண்டவர். உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் தமிழின் பெருமையை பறைசாற்றியவர்.

மீண்டும் காங்கிரஸ் – திமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை தடை செய்து விடுவார்கள் எனவும் அமித்ஷா மேலும் தெரிவித்தார்.