January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காங்கிரஸும் தி.மு.க.வும் வாரிசுகளின் நலனில் மட்டுமே அக்கறை காட்டுகின்றன’; நரேந்திர மோடி

பாரதிய ஜனதா அரசின் கவனம் எல்லாம் நாட்டின் மீதே உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கவனமோ தங்களது வாரிசுகள் மீது உள்ளது என கன்னியாகுமரி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் பரப்புரையில் ஈடுபட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க,அ.தி.மு.க மற்றும் த.மா.கா வேட்பாளர்களான எம்.ஆர்.காந்தி,குமரி ரமேஷ்,ஜெயசீலன்,நயினார் நாகேந்திரன்,தளவாய் சுந்தரம், ஜாண்தங்கம்,ஜூட் தேவ் மற்றும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகி யோரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கடந்த காலத்தில் புயலினால் சேதமடைந்த ராமேஸ்வரம் பாலத்தை யாரும் சீரமைக்கவில்லை. இதைப்போல் பாம்பன் பாலமும் இருந்தது.பா.ஜ.க அரசு வந்த பின்னர் தான் அவை சீரமைக்கப்பட்டன.

பகவதியம்மன் கோயில், நாகராஜா கோயில், சுவாமி விவேகானந்தர் நினைவிடம் போன்றவை கன்னியாகுமரியின் சிறப்பை உலகிற்கு உணர்த்துகிறது.

எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் தி.மு.க.வும் தங்களது வாரிசுகளின் நலனின் மட்டுமே அக்கறை காட்டுகின்றன. ஆனால் நாங்களோ மக்களின் நலனில் அக்கறை காட்டுகின்றோம். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட செவிலியர் மற்றும் பாதிரியாரை பத்திரமாக மீட்டு உள்ளோம்.

நமது கவனம் எல்லாம் நாட்டின் மீது தான் இருக்கிறது. எங்களது சித்தாந்தம் அனைவரையும் முன்னேற்றமடைய செய்யவேண்டும்.மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே.

தமிழகத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவினால் தாய் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.அவர்களை பத்திரமாக மீட்டு நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் எந்த புனித புத்தகத்தை படிக்கிறார்கள் என்பதை பற்றி நாங்கள் பார்க்கவில்லை.

இன்று இயேசுநாதரின் தியாகத்தை நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறோம்.அனைவரையும் இந்தியர்கள் ஆகவே பார்க்கிறோம்.

கொப்பரை தேங்காய், மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் அதிக அக்கறை எடுத்து வருகிறோம். மீன்பிடித் தொழிலை மேம்படுத்த விவசாயத்தை மேம்படுத்த சிறு குறு தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை தீட்டி உள்ளோம். இதற்காகவே சிறு மற்றும் குறு துறைமுகங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்.

வருகின்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளியுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.