தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அங்கு இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வர இருக்கிறார்.
மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அதிமுக, பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இன்று இரவு 8 மணிக்கு மதுரை வரும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மோடி ஆதரவு திரட்டுவார்.
நேற்று முன்தினம் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
இம்முறை சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டி மதுரை நகரில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.