இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து விமான நிலையங்களில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் உடனடியாக அபராதம் வசூலிக்கும் படி அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பல்வேறு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை சரியாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதலால், அனைத்துப் பயணிகளும் முகக்கவசம் அணிவதுடன் மூக்கு மற்றும் வாய்ப் பகுதி மறையும்படி முகக்கவசத்தை முறையாக அணிந்திருப்பதை விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணியாத மற்றும் முறையாக அணியாத பயணிகளை கண்காணித்தல் வேண்டும் எனவும் தவறும் பயணிகளிடம் பொலிஸாரின் உதவியுடன், விமான நிலைய அதிகாரிகள் உடனடி அபராதம் வசூலிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.