(Photo : Twitter/Edappadi K Palaniswami)
தமிழகத்தின் சட்டசபை தேர்தல் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரங்களில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் தாராபுரம் (தனி) தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இதன் போது பிரதமர் மோடிக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.
வேலை பெற்றுக்கொண்ட மோடி “வெற்றி வேல் வீர வேல்” எனக்கூறி தனது பேச்சை தொடர்ந்தார்.
இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எல்.முருகன், ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இதன் போது பேசிய பிரதமர் மோடி, தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என தெரிவித்தார்.
உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.பா.ஜ.க.வுக்கு வளர்ச்சிதான் முக்கியம். ஆனால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம். தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள்.
முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து தி.மு.க அவமதித்தது கண்டிக்கத்தக்கது.பெண்கள் குறித்து தி.மு.க.வின் திண்டுக்கல் லியோனியும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார்.ஒரு வேளை தி.மு.க-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டால் இன்னும் பெண்களை இழிவுபடுத்துவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, ”தமிழகத்தின் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடுவர்” என்று தெரிவித்தார்.