Photo: Edappadi K Palaniswami/ Twitter
”தேர்தல் தோல்விக்குப் பிறகு ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக் கொள்வார், ஏனென்றால் அவர் முதலமைச்சராகும் கனவில் இருக்கிறார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டு மக்களின் நன்மைக்காக சேர்ந்த கூட்டணி அதிமுக எனவும், திமுக அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
அத்தோடு ‘சட்டப் பேரவையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துகொண்டு சட்டத்தை மதிக்காமல் திமுகவினர் அராஜகம், ரவுடித்தனம் செய்கின்றனர்.
ஒரு தடவை சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியே சென்றார்.
அதேபோல் தற்போது ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் இருப்பதால், தேர்தல் தோல்விக்குப் பிறகும் ஸ்டாலின் சட்டையைக் கிழித்துக் கொள்வார்’ எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
அத்துடன் திமுகவால் சட்டப் பேரவையிலே பாதுகாப்பு இல்லாதபோது, நாட்டு மக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
”அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. பெண்கள், மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். நான் எப்போதும் முதல்வர் என்று சொன்னதில்லை. மக்கள்தான் முதல்வர். மக்கள் உத்தரவுகளையே நான் நிறைவேற்றுகிறேன்”எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்டாலினின் தந்தை முதல்வராக இருந்ததால், செல்வச் செழிப்புடன் பதவிக்கு வந்தார். ஆனால், நான் கீழ் மட்டத்தில் இருந்து, கட்சிக்கு விசுவாசமாக இருந்து முதல்வர் பதவிக்கு வந்தேன்.
தந்தை விலாசத்தில் வந்தவர் ஸ்டாலின், தர்மம், நீதிப்படி அடிமட்டத்தில் இருந்து உழைத்து வருபவர்தான் பதவிக்கு வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.