January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சர் கனவை காணமுடியாது’: ஸ்டாலின் விமர்சனம்

(Photo: DMK/Twitter)

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சர் என்ற கனவை காணமுடியாது என திமுக தலைவரும் வேட்பாளருமாகிய முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் அங்கு உரையாற்றுகையில், எனது கனவு பலிக்காது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறி வருகிறார். நானாவது கனவு காண்கிறேன், அவருக்கோ அடுத்த முதலமைச்சர் பதவி என்பதைக்கூட கனவில் காண முடியாது என விமர்சித்துள்ளார்.

மேலும், ஆளும் கட்சியினர் கொரோனா காலத்தில் கூட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை, கொரோனா காலத்தில் கழகத் தோழர்கள் அத்தனை பேரும் களத்தில் இறங்கிப் பணியாற்றி உதவி செய்தது திமுகவின் மிகப்பெரிய வரலாறு என்பதை நான் சொல்ல விரும்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ‘தமிழ்நாட்டில் அல்ல, இந்தியாவில் அல்ல, உலகத்தில் எந்த கட்சியும் செய்யாத ஒரு சாதனையைத் திமுக செய்தது.

அரசாங்க பணத்தைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துகிற ஒரு ஆட்சி தான் இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’ எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என்னை முதலமைச்சராக்க வேண்டும் என்பதில் மக்கள் இன்றைக்குத் தெளிவாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிமுக ஆட்சியை மட்டுமல்ல, பாஜகவையும் உள்ளே விடக்கூடாது எனவும் திராவிட மண், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். மோடி மஸ்தான் வேலைகள் இங்குப் பலிக்காது எனவும் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.