July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சாதிவெறி சக்திகளை எதிர்த்து, சகோதர உணர்வை வலுப்படுத்திடுவோம்’; தேர்தல் அறிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

சாதிவெறி சக்திகளை எதிர்த்து, சகோதர உணர்வை வலுப்படுத்திட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைவர் திருமாவளவனால் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கவும், சாதி மறுப்பு மணம்புரிந்த தம்பதியினரைப் பாதுகாக்க தனி காவல் பிரிவு உருவாக்க வலியுறுத்தப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு துறைகளில் மாநில அரசால் செயல்படுத்தப்படும் இட ஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மதவெறி, சாதிவெறி சக்திகளை எதிர்ப்போம். மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம். சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வோம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஏழு தமிழர் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்போம்.தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் கச்சதீவு மீட்புக்காக நடவடிக்கை எடுக்கப்படும்,மீனவர் பாதுகாப்பிற்கு தனி ஆணையம் அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவ மக்கள் மீன்பிடி தொழிலின் போது இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தப்படும் எனவும் ,தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில் நிலங்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவற்றை ஏழைத் தமிழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்துப் பெண்களுக்கும் இலவசமாக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

திருநங்கையருக்கு கல்வி – வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கிடவும், அவர்கள் பாதுகாப்பாக குடியிருக்க தனியாக அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பொதுக்கிணறு, பொதுப் பாதை, பொது சுடுகாடு, பொதுக் கோயில் போன்ற அனைத்து நிலைகளிலும் பட்டியலின மக்களின் உரிமைகளை நிலைநாட்ட பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட வலியுறுத்துவோம்.

பட்டியலின இட ஒதுக்கீட்டை 2011 மக்கள்தொகை அடிப்படையில் 21% ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.

ஓபிசி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையை ஒழிக்க பாடுபடுவோம். தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறை பாதுகாக்கப்படும்.

மாநில சுயாட்சி நிலைபெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் எதிரான மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை தடுக்க போராடுவோம் .

பெண்களுக்கு 33 விழுக்காடு அமல்படுத்தவும் பின்னர் அதை 50 விழுக்காடாக உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.