July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்லை தாண்டிய 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் 54 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோவிலன் பிரதேசத்தை அண்மித்த கடல் பகுதியில் படகொன்றில் இருந்து 14 பேரும், மன்னார் பேசாலை கடல் பகுதியில் இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 20 பேரும், முல்லைத்தீவு கடல் பிரதேசத்தில் இரண்டு படகுகளில் இருந்த 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தள்ளனர்.

இதன்போது இவர்களின் 5 படகுகளும், அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எல்லை தாண்டி இலங்கைக் கடற்பகுதிக்கு நுழைந்து, தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு கடற்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.

கைது செய்யப்பட்டுள்ள 54 மீனவர்களும், அவர்களின் படகுகளும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.