November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும்’

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆனாலும்,இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுக்காமல்,இந்தியா நடுநிலை வகித்திருப்பது தமிழர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி, அதில் தெரியவரும் உண்மைகளை ஆவணப்படுத்துவதற்காக பன்னாட்டு பொறிமுறை அமைக்கக் கோரும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதி பெற்றுத் தருவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து பன்னாட்டு குற்றவியல்  நீதிமன்றம் (International Criminal Court)அல்லது அதற்கு இணையான அமைப்புகளின் விசாரணைக்கு ஆணையிடுமாறு ஐ.நா.பொது அவைக்கும், ஐ.நா. பாதுகாப்பு அவைக்கும் பரிந்துரைக்க வேண்டும்.

இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, பன்னாட்டு பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

21.1.2018, 04.02.2019, 26.02.2019 ஆகிய நாட்களில் நானும், 21.02.2020 அன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம்.

உலக மனித உரிமை நாளான 10.12.2018 அன்று இக்கோரிக்கையை வலியுறுத்தி டுவிட்டர் இயக்கம் நடத்தினோம். 31.12.2018 அன்று கோவையில் நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்திலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பா.ம.க முன்வைத்த இந்தக் கோரிக்கைகளையே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் தீர்மானமாக கொண்டு வந்ததும், அது நிறைவேற்றப்பட்டிருப்பதும் பெரும் முன்னேற்றமாகும்.

இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்து ஆவணப்படுத்துவதற்காக பன்னாட்டு பொறிமுறை அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில்,போர்க்குற்றங்கள் குறித்த புகார்கள் குறித்த அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.

இந்தப் பணிகள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைவடைய வாய்ப்புகள் உள்ளன. அதன்பின்னர் பன்னாட்டுப் பொறிமுறை ஆவணப்படுத்திய ஆதாரங்களை அடிப்படையாக வைத்து மனித உரிமைகளில் அக்கறையுள்ள எந்த நாடும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் வழக்குத் தொடர முடியும் என ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டால் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, இலங்கையில் போர்க்குற்றங்களை நிகழ்த்திய ராஜபக்‌ஷ குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து போர்க்குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனையை பெற்றுத் தர முடியும்  என அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த வகையில் இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் 23.03.2021 அன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இலங்கை மீதான போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி திரட்டப்படும் ஆதாரங்கள் குறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்,அதுகுறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அந்த விவாதங்களில் இந்தியா தவறாமல் கலந்து கொண்டு இலங்கை போர்க்குற்றங்கள்  தொடர்பான ஆவணங்களை வலுப்படுத்தவும், போர்க்குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி தண்டிப்பதன் மூலம் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தரவும் இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கை மூலமாக வலியுறுத்தி உள்ளார்.