November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவாவில் வாக்களிக்காத இந்தியா; தமிழகத் தலைவர்கள் கண்டனம்

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு வாக்களிக்காத இந்திய அரசுக்கு எதிராக தமிழக தலைவர்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை மீதான ஐநா வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காததைக் கண்டித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் தேர்தல் நடப்பதால், மக்களை ஏமாற்றுவதற்காக இந்தியா வெளிநடப்பு செய்துள்ளதாகவும், இல்லையேல் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்து இருப்பார்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக அப்பட்டமான இனப்படுகொலை மேற்கொண்டதாகவும், இதுதொடர்பில் சர்வதேச சமுதாயம் தன் கடமையில் இருந்து தவறியுள்ளதாகவும் அவர் குறிறம்சாட்டியுள்ளார்.

இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தி இருந்த நிலையில், இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் இந்திய அரசு வெளிநடப்பு செய்துள்ளதாகவும், இது இலங்கைக்கு மிகவும் சாதகமான நிலைப்பாடுதான் என்பதை இலங்கை அரசே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பாஜக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே, இலங்கை அரசுக்கு எதிரான ஐநா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

எதிலும் இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு என்று செயற்படும் இந்தியாவை ஆளும் பாஜக அரசு, இலங்கை மீதான வாக்கெடுப்பிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளதை கி. வீரமணி கண்டித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததன் மூலம் பாஜகவின் தமிழர் விரோதப் போக்கும் துரோகமும் உலக அரங்கில் அம்பலப்பட்டுவிட்டதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்தில் மிக முக்கியமான கட்டமாகும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.