November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கு அஸ்திரேலியாவில் சட்டசபை உறுப்பினராகும் முதலாவது தமிழர்!

(Photo : Facebook /Dr.Krishnan)

மேற்கு அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மாநில பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம், ஊட்டி அருகில் உள்ள கோத்தகிரியைச் சேர்ந்த ஜெகதீஷ் கிருஷ்ணன், சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ் பின்னணியைக் கொண்ட ஜகதீஷ் கிருஷ்ணன் தொழிலாளர் கட்சி சார்பில் ரிவர்டன் தொகுதியில், போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

இதையடுத்து மேற்கு அஸ்திரேலியாவில் சட்டசபை உறுப்பினராகும் முதலாவது தமிழர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து மேற்படிப்பிற்காக லண்டன் சென்று, பின்னர் அங்கிருந்து 2006ம் ஆண்டு மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் குடியேறியுள்ளார்.

வைத்தியரான இவர் Byford பகுதியில்  4 ஆண்டுகளாக பணியாற்றிவருவதுடன், நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகின்றார்.

வைத்தியர் ஜெகதீஷ் கிருஷ்ணன், Royal Australian College of General Practitioners இன் உயர் விருது மற்றும் Sam Bada IMG Support Award போன்ற விருதுகளுக்குச் சொந்தக்காரர் ஆவார்.

உதைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள இவர் பயிற்றுவிப்பாளராக பணியாற்றும் அதேநேரம் Western Knights Masters அணிக்காக தற்போது விளையாடுகின்றார்.

தன் மருத்துவ பணியுடன் இணைந்து அவுஸ்திரேலிய மக்களுக்கும் சேவை செய்வதே தமது நோக்கம் என வைத்தியர் ஜெகதீஷ் கிருஷ்ணன், அவுஸ்திரேலியாவின் SBS செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இவரின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தேர்தலில், Premier Mark McGowan தலைமையிலான தொழிலாளர் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 59 இடங்களில் தொழிலாளர் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.